கருப்பட்டி கடலை மிட்டாய் – துவக்க விழா
கடலை மிட்டாய் செய்யலாம்,அதுலேயும் நம்ம பழைய முறையில கருப்பட்டியிலேயே செய்யலாம் அப்பிடின்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறமா .நிறைய கேள்வி வர ஆரம்பிச்சது மனசுக்கு உள்ளேயும் வெளியேயுமாக.வீட்டை விட்டு வெளியே கிளம்பிட்டேன்.
பார்கிறவங்க கிட்ட எல்லாம் கருப்பட்டி கடலை மிட்டாய் பத்தி கேட்க ஆரம்பிச்சேன்.ஒரு மாதம் முழுக்க நிறைய ஊர்க்கு போய் கடலை மிட்டாய் செய்ற இடத்தை பார்த்தேன்.பெரிய கம்பெனிகளோட கேட்டுக்குள்ளே கூட போக முடியாத சூழ்நிலை தான் உள்ளது.சின்ன கம்பெனிகளும் அதோட தொடர்புடையவங்களும் தான் வாய் திறந்து பேசினாங்க.
தனியா வீட்டுல அடுப்பு கட்டி வச்சு செய்றவங்க , அப்புறமா அண்ணன் தம்பி ரெண்டு மூனு பேருசேர்ந்து ஒரே இடத்துல தொழில் நடத்துறவங்க,நெருக்கடியான குடியிருப்புக்குள்ளே கூட இரண்டாவது மாடியிலஇடம் அமைச்சு செய்றவங்கன்னு வித விதமா பார்த்தேன்.முழுக்க உடல் உழைப்பை நம்பியே இந்த தொழில் முறை உள்ளது.என்னதான் விலை போட்டு மெசின் வாங்கினாலும் பெரிய பயன்பாடு இல்லை அப்பிடி பயன் படுத்தினாலும் அதுக்கு அப்புறமாவும் மனித உழைப்பு தேவைப்படுது.பாகு காய்ச்சுற அடுப்போட வெட்கை,கவனம் சிதறாம செய்ய கட்டாயம்,வேலை நேரம்,வேலை ஆட்கள் நிரந்திரம் இல்லாத நிலை,நிலக்கடலையோட விலை வாசி உயர்வு,தரமான வெல்லத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ,அடிப்படை கணக்கு என பல விசயங்கள் இதோடு இணைந்து இருப்பது புரிய ஆரம்பிச்சது.
ஆனா கருப்பட்டில செய்ற கடலை மிட்டாய் பத்தி அதிக அனுபவமோ,தகவலோ எனக்கு கிடைக்கல.முழுக்க முழுக்க வெல்லத்துல தான் இதை எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா செய்றோம்னு நிறைய பேர் சொன்னாங்க.ஒரு வேலையை சொல்றது ரொம்ப எளிமை ஆனா செஞ்சு பார்க்கும் போது தான் அதுல இருக்க கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியுது.பரிசோதனை முயற்சிகள் தொடர ஆரம்பிச்சது தோல்விகள் புதிய படிப்பினைகளை கொடுத்தது.மனசு ரொம்ப சோர்ந்த போது எல்லாம் சின்ன நம்பிக்கை கீற்றை இயற்கை உருவாக்கிக் கொடுத்தது.
பேஸ்புக் மூலமா நண்பர்கள் கிட்ட இருந்து ரொம்ப பெரிய வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைச்சது.நிறைய புதிய நண்பர்கள் தொலை பேசி மூலமா ரொம்ப உற்சாகம் கொடுத்தாங்க.தைரியமா செய்யுங்க நாங்க உங்களுக்கு உதவியா இருக்கோம்னு சொன்னாங்க இளைய தலைமுறையினர்.மூத்தவங்க தாங்க இழந்த ஒன்னு திரும்ப கிடைகிறதை எண்ணி சந்தோசப்பட்டாங்க ஆசிவாதம் பண்ணாங்க.பழைய நினைவுகளையும் பகிர்ந்துகிட்டாங்க.
வீட்டுல இருந்தவங்களோட தயக்கம்,கேள்விகள் எல்லாம் கடலை மிட்டாயும்,கவரும் தயாராகி வந்த பிறகு சிறிது சிறிதாக மாறி அவர்கள் முகத்திலும் நம்பிக்கையை கண்டேன்.அம்மா,அப்பா,அண்ணன்,அண்ணி,சித்தி,தங்கச்சிங்க,அண்ணன் பையன் எல்லாரும் மூனு நாலு மணி நேரத்துக்கு மேல உட்கார்ந்து அந்த பேப்பர் கவரை பொறுமையா மடிச்சு ஒட்டிக் கொடுத்தாங்க.அது முழுமையானது அவர்களோட பங்களிப்பால தான்.
மூலப் பொருட்களோட விலை வாசி,தரம் நேரடி கொள் முதல்,நிகழ்வு நடைபெறுகிற பள்ளி இடத்தோட அனுமதி,கவர் டிசைன்,ப்ரிண்டிங்,பணம் இப்படி ஒவ்வொன்லையும் நிறைய பேரோட உதவி இருக்கு.இரவு தூங்கும் போது அடுத்த நாளை பற்றிய பயத்தோட தான் தூங்கினேன்.வீட்டுல காலையில எல்லாருக்கும் முன்னாடி எந்திரிச்சு கட்டைப் பை நிறைய ”கருப்பட்டி கடலை மிட்டாய்” எடுத்துகிட்டு கிளம்பிட்டேன்.
காலை 6 மணிக்கு டி.கல்லுப்பட்டி போய் சேர்ந்தேன்,கொஞ்ச தூரம் நடந்து வந்து இருப்பேன்.ரோட்டுல ஒரு நாய் குட்டி அடிபட்டு செத்தது மாதிரி கிடந்தது,கிட்ட போய் பார்த்தா துடிச்சுகிட்டு இருந்தது.அதை பக்கத்துல இருந்த மரத்தடிக்கு தூக்கிக் கிட்டு வந்தேன்.பக்கத்துல தள்ளுவண்டி டீக்கடையில பாலும் ,தண்ணியும் வாங்கி கொடுத்து பார்த்தேன்.அந்த கடைக் கார அண்ணனோட சின்ன பையனும் பொண்ணும் ஏன் கூட சேர்ந்து கிட்டாங்க.அதை எப்பிடியாவது காப்பாற்ற நாங்க ஒன்றரை மணி நேரமா முயற்சி செய்தோம்.வெட்னரி டாக்டர் நம்பருக்காக GH பக்கத்துல இருக்கிற போலிஸ் டேசன்,தீ அணைப்பு நிலையம்,டூ வீலர் ஸ்டாண்டு,தனியார் மருந்துக்கடைன்னு அலைஞ்சேன்,பசங்க ரெண்டு பேரும் நாய் குட்டிக்கு பாதுகாப்பா அங்கேயே இருந்தாங்க.
கடைசியா நம்பர் கிடைச்சது அந்த டாக்டரோட அம்மாவுக்கு சீரியஸ் அவரும் லீவு,சரி உதவியாளர் வருவாங்க பாருங்கன்னு சொல்லிட்டு போனை வைச்சுட்டாரு அவரு .மணி 8 ஆயிடுச்சு நிகழ்வுக்கு எல்லாரும் வர ஆரம்ச்சுட்டாங்க பக்கத்துல இருந்த அந்த ஊர்க்காரஅண்ணன் கிட்ட சொல்லிட்டு நானும் மனசே இல்லாம கிளம்பினேன்.ஆனா எல்லாரும் அவங்க அளவுக்கு உதவி செஞ்சாங்க அது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்தது…
முந்தின நாள் பெய்த மழை அந்த இடத்தை ரொம்ப உயிர்ப்பா வைச்சு இருந்துச்சு.பசங்க நிறைய பேரு அந்த பள்ளியோட சர்வ சமய பிரார்த்தனை கூட்டத்திற்காக கூடியிருந்தார்கள்.சொந்தக் காரவங்க,பத்திரிக்கை நண்பர்களும் வந்து எங்களோட சேர்ந்து கிட்டாங்க.
தாய்மை பொருளாதரத்தை அளித்த ஜே.சி.குமரப்பா அவர்களோட சமாதிக்கு மாலையும் மலர்களும் கொண்டு வந்து வைச்சோம்.குடிசை தொழில் மூலமா பலதரப் பட்ட மக்களோட உழைப்பால உருவான கருப்பட்டில செய்த கடலைமிட்டாயை அவரோட சமாதிக்கு முன்னாடி அர்ப்பணம் செஞ்சோம்.10 நிமிட பிரார்த்தனைக்கு அப்புறமா இந்த பயணம் இதோட நோக்கம் இதை பத்தி எல்லாம் நான் பேசினேன்.கருப்பட்டி அந்த காலத்துல சவளக் குழந்தகளைக்கூட காப்பாத்திருக்கு,அது மாதிரி இந்த தொழில் இன்னைக்கும் பல குடும்பங்களை வாழ வைச்சுகிட்டு இருக்கு,அதுக்கு இடையூறா பெரிய நிறுவங்கள் இந்த தொழிலுக்கு உள்ள வந்துட்டாங்க.அதுனால அதோட தரத்துல ஏற்படுகிற குறைபாடுகள்ன்னு நிறைய பகிர்ந்துகிட்டோம்.
இந்த தொழிலை 35 வருசங்களுக்கு மேல முழுமையான தரத்தோட செஞ்சுகிட்டு இருக்க கூடலிங்கம் அப்பாவுக்கும் அவரை மாதிரியான பல நல்ல உள்ளங்களுக்கும் நான் மானசிகமாக தலை வணங்கினேன்.
மிட்டாயை மண்ணுல வைச்ச அடுத்த நிமிசம் அவ்வளவு எறும்புகள் வந்து மொய்ச்சது,இதைப் போலவே நம் மக்களுக்கும் இதை வாங்கி சாப்பிடனும் முழு பயனும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் போய் சேரனும்னு தோணுச்சு.அரசுப் பள்ளிகள்ல தினம் தினம் தருகிற பிராய்லர் கோழி முட்டைக்கு பதிலாக கடலை மிட்டாய் போன்ற நல்ல பண்டங்களை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.நம் குழந்தைகளுக்கும் நமது கலாச்சார உணவின் பற்றிய அறிமுகம் கிடைக்கும்.
சமாதியின் அருகில் காந்தியின் மனதுக்கு நெருக்கமான நாவல் மரம் ஒன்றை எல்லோரும் சேர்ந்து நட்டு நீர் ஊற்றினோம்.வருடத்தில் ஒரு முறையாவது இந்த இடத்திற்கு வர வேண்டும் என முடிவு செய்து கொண்டோம்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த காந்தி நிகேதன் பள்ளி,காலை ஆறு மணிக்கு நூல் நூற்பதில் துவங்கி 10.30 மணி வரை நிகழ்வுகள் மகாத்துமா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்திக் கொண்டு இருந்தது.விடுதி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நாம் அறிமுகப் படுத்திய மிட்டாயை சாப்பிடக் கொடுத்தோம்.குழந்தைகளிடமும் இதனை பற்றி பகிர்ந்து கொண்டேன்.சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சுட்டிப் பையன் அண்ணே நல்லா இருக்கு எங்க வீட்டுக்கு ஒன்னு பார்சல் அப்பிடின்னு சொல்லிட்டு ஓடுனான்.
நிகழ்வு முடிந்து பள்ளி வாசலை நோக்கி நடந்து கொண்டு இருந்த போது,வாசலில் உட்கார்ந்து வெள்ளரிக்காய் விற்றுக் கொண்டு இருந்த பாட்டியிடம் கடலை மிட்டாயை சாப்பிட்டு பார்க்க சொல்லி கொடுத்தேன்.கையில வாங்கி கொண்டு ”நல்லாதான் சாமி இருக்கும் “என என் முகம் பார்த்து சிரித்தார்கள்.என்னோட சின்ன வயசுல நாங்க பள்ளிக் கூடத்துக்கு முன்னாடி இருந்த ”நைனா ”பாட்டிக் கடையில தோல் சுருக்களோட இருக்கிற கையில வாங்கி சாப்பிட்ட திண்பண்டங்கள் எல்லாம் ஞாபத்துக்கு வந்தது.
ஊருக்கு திரும்பும் போது அந்த நாய்குட்டியை காப்பாத்தியாச்சுன்னு கிடைச்ச தகவலும்,அதிகாலையில நான் பார்த்த விடிவெள்ளியும் நம்மாழ்வார் அய்யோவோட ஆன்மா தான்…