கருப்பட்டி கடலை மிட்டாய் பிசினஸில் அசத்தும் காரியாப்பட்டி குடும்பத்தினர்!
“உடலுக்குக் கெடுதல் தராத ஒரு தின்பண்டத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறோம். அது நம்ம பாரம்பர்ய நொறுக்குத் தீனியா இருந்தா மனசு சந்தோஷமா இருக்கும்ல!” என்று கிராமத்துக்குரிய பாணியில் பேசுகிறார் கெளதமி. தன் கணவர் ஸ்டாலினுடன் இணைந்து ஆன்லைன் மூலமாகக் கடலைமிட்டாயை விற்பனை செய்து வருபவர்களிடம் பேசினோம்.
“நானும் என் கணவரும் காதல் திருமணம் பண்ணினவங்க. ரெண்டு பேரும் டிகிரி முடிச்சுட்டுப் பெரிய நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தோம். மனசுக்கு நிறைவான வருமானம் கிடைச்சாலும் மனசுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டுச்சு. நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசினோம். வேலையை விடுறதுனால வரக்கூடிய பொருளாதார ஏற்றத்தாழ்வை, நெருக்கடியை எப்படி எதிர்கொள்றதுனு பேசினோம். இப்படியே உட்கார்ந்தா வாழ்க்கையில வளர்கிறதுக்கான வாய்ப்பே இல்லாமப் போயிடும்னு தோணுச்சு. மாற்றத்தை ரெண்டு பேரும் விரும்பினோம். அப்படியொரு மாற்றம்தான் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த எங்களைக் கடலைமிட்டாய் பிசினஸ் செய்யும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. வேலையை விட்டப்ப எங்களைப் பார்த்து எதுக்கு இந்த வேண்டாத வேலைனு நிறைய பேர் சிரிச்சாங்க. அவங்களுக்கு எல்லாம் ஒரு பதில் சொல்லத்தான் கருப்பட்டி கடலைமிட்டாய் பிசினஸ் ஆன்லைன் விற்பனையை ஆரம்பிச்சோம்” என்றபடியே கருப்பட்டி காய்ச்சுவதில் மும்முரமானார்.
“என் கணவர் கல்யாணத்துக்கு முன்னாடியே கடலை மிட்டாய் தயாரிப்புல ஈடுபட்டிருந்திருக்கார். ரெண்டு பேரும் வேலையை விட்டதும் பிசினஸ்ல ஈடுபட ஆரம்பிச்சோம். வழக்கமாச் செய்ற கடலைமிட்டாயா இல்லாம கருப்பட்டில கடலைமிட்டாய் செய்யலாமேனு ஐடியா சொன்னார். நான் அதை ஆன்லைன்ல பிசினஸ் செய்யலாமேனு ஐடியா சொன்னேன். மத்தபடி அவருடைய உழைப்புதான் முழுசும்” என்று தன் கணவர் பேச வழிவிடுகிறார் கெளதமி. தொடர்ந்தார் ஸ்டாலின்.
“படிப்பு முடிச்சு கோயம்புத்தூர்ல வேலை பார்த்த எனக்கு அந்தச் சூழல் அவ்வளவா பிடிக்கலை. மனசெல்லாம் சொந்த ஊர் பத்தியே இருந்தது. வீட்டுக்குத் திரும்பின எனக்குப் பொருளாதார நெருக்கடி உறைக்க ஆரம்பிச்சது. அப்போதான் என் அண்ணன் உணவு சார்ந்த பிசினஸ் செய்ய ஐடியா கொடுத்தார். குழந்தைகளுக்கு ஆரோக்கியமா ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாமேனு தோணுச்சு. சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்தமான கடலை மிட்டாயை என் பிசினஸாக மாற்றும் முடிவுக்கு வந்தேன். கடலை மிட்டாய் தயாரிப்பு பற்றி எந்த முன் அனுபவமும் எனக்குக் கிடையாது. ஆனா கடலைமிட்டாய்தான் என் பிசினஸ்ங்கிறதுல தெளிவா இருந்தேன்.
கடலைமிட்டாய் எப்படிச் செய்றாங்கனு தேட, பயணப்பட ஆரம்பிச்சேன். நிறைய கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல அந்த பிசினஸ்ல இறங்கியிருந்த என் நண்பரோட குடும்பத்துக்குப் போய் அதை எப்படிச் செய்றாங்கனு இன்ச் பை இன்சா கத்துக்கிட்டேன். கருப்பட்டியில் கடலை மிட்டாய் செய்யப் போறேன்னு சொன்னதும் என் ஃப்ரெண்ட் வீட்ல சிரிச்சுட்டாங்க. வெல்லத்தைவிடக் கருப்பட்டி ஏழு மடங்கு விலை அதிகம். இது தொழிலுக்குக் கட்டுபடி ஆகாதுன்னு சொன்னாங்க.
ஆனா என் குடும்பம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. ஜெயிக்கிறோமோ இல்லியோ… களத்துல இறங்கி பார்த்துடலாம்னு முடிவு பண்ணினேன். பிசினஸ் ஆரம்பிச்ச புதுசுல நிறைய தடுமாற்றம். விற்பனைகூட குறைவாத்தான் இருந்தது. மெதுமெதுவா விற்பனை சூடுபிடிச்சது. விற்பனை எப்படி இருந்தாலும் தரத்துலேயும், சுவைலேயும் மாற்றம் வந்திடக் கூடாதுனு கவனமா இருந்தோம்.
கடலையைத் தேர்வு செய்து வாங்குவது, கருப்பட்டிவாங்குவது, கருப்பட்டியில் பாகு எடுப்பது, கடலைமிட்டாய் செய்வது, பேக்கிங், கொரியர்னு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு வேலை பார்க்கிறோம். நிறைய ஆர்டர்கள் வரும் சமயத்தில் தூக்கம் இல்லாமல் இரவு பகலாக உழைப்போம். அந்த உழைப்புதான் “தாய்வழி” என்ற நிறுவனமாக மாறியிருக்கு. ஒவ்வொரு ஆர்டரிலும் கஸ்டமர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இந்த எண்ணங்கள்தான் எங்களின் வளர்ச்சிக்கு ஆரம்பமாக இருக்கிறது. லாபத்தை அதிகரிக்க உற்பத்தியை அதிகரிக்கிறோம். இப்போது மாதம் எண்பதாயிரம் வரை லாபம் கிடைக்கிறது. எங்களைப் பார்த்து கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் நாங்கள் எங்கள் உழைப்பு மூலமாகப் பதில் கொடுத்திட்டோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் சாக்லேட்களை விட எங்கள் கருப்பட்டி கடலை மிட்டாய் விலை குறைவு. ஆனால் ஆரோக்கியம் அதிகம்” என்கிறார் பெருமிதத்துடன்.