ஆசையும் கனவுமாக விரிந்து செல்லும் இந்த வாழ்வில் பயணங்கள் எப்போதும் மனதுக்கு மிக சந்தோஷமும் உற்சாகமும் அளிக்க வல்லது.

அதுவும் Vinodh Baluchamy இந்த யாத்திரிகனுடனும் அவரின் செல்ல சின்ன வாண்டு ஆதவனும் உடன் வர துவங்கினோம் வீட்டில் இருந்து பயணத்தை.
சாயல்குடி அருகில் இருக்கும் கன்னி ராஜபுரம் அப்பா நாற்பது ஆண்டுகள் முன்னாடி தபால் அலுவலக ஊழியராக ஆறு மாதங்கள் வேலை செய்த சின்ன கிராமம்.
முகநூல் வழியாக மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகமான மாரிசெல்வன் அண்ணா மற்றும் அவரது மொத்த குடும்பமும் தலைமுறை தலைமுறையாக இந்த பனை தொழிலில் உள்ளனர். இரு முறை சென்ற போதிலும் இது வெகு நாள் காத்திருந்த வாய்ப்பு .அவர்களின் அன்றாடத்தில் முழு நாள் உடன் இருத்தல்.
முதல் நாள் மாலையே கிளம்பி அவர்களின் வீடு வந்து தங்கிவிட்டோம்.கடற்கரை மணலில் அமைந்த வீடு.செல்வன் அண்ணனின் குட்டி பாப்பா வைத்த கண் வாங்காமல் எங்களையே பார்த்து கொண்டு இருந்தால்.
நாங்கள் வந்திருக்கும் நாள் இந்த ஆண்டின் பருவத்தின் கடைசி நாட்கள்,அதனால் காலை ஐந்து மணிக்கு அப்பா பனை சீவ செல்கிறார். இல்லையெனில் ரெண்டு மணிக்கு எல்லாம் துவங்கி விடுகிறது பனை மரம் ஏறும் வேலை.
ஒவ்வொரு தருணமும் அறிதலுக்கான கணங்கள்… வினோத் அண்ணன் ஐந்து மணிக்கும் எல்லாம் ஆதவை எழுப்பி பனங்காட்டுக்கு விரைந்தோம். அப்பா ஏற்கனவே வேலைகளை துவக்கி இருந்தார்…
நட்சத்திரம் பூத்த பனைமரமாக அந்த காட்சி கண் விட்டு அகலவில்லை.